தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா அரசு பஸ் சேவை தொடர்கிறது என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த சேவை நிறுத்தப்பட்டதாக பரவிய தகவல்களுக்கு தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சமூக வலைதளங்களில், பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வேகமாக பரவின. இதனால் பொதுமக்கள், குறிப்பாக தினசரி அரசு பேருந்துகளை பயன்படுத்தும் பெண்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட விளக்கத்தில், மகளிருக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயண திட்டம் தொடர்ந்து அமலில் உள்ளது என உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இன்று அரசு பேருந்துகளில் பெண்களுக்கு வழங்கப்பட்ட கட்டணமில்லா டிக்கெட்டுகளின் புகைப்படங்களையும் ஆதாரமாக வெளியிட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் தினசரி வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். பெண்களின் பொருளாதார சுமையை குறைக்கும் நோக்கில் இந்த இலவச பஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், அனைத்து மாநகர பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் பரவும் உறுதி செய்யப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
