Home Trending/Viral “நான் தான் பேசுவேன்!” – கேமரா முன்னால் விவசாயிகளுக்குள் திடீர் வாக்குவாதம்; செங்கல்பட்டில் பெரும் சலசலப்பு!

“நான் தான் பேசுவேன்!” – கேமரா முன்னால் விவசாயிகளுக்குள் திடீர் வாக்குவாதம்; செங்கல்பட்டில் பெரும் சலசலப்பு!

0

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலச்சங்கம் மற்றும் பல்வேறு கூட்டமைப்பு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் தமிழக அரசைக் கண்டித்து இன்று மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, செய்தியாளர்கள் முன்னிலையில் ‘யார் பேசுவது’ என்று விவசாயிகளுக்குள்ளேயே ஏற்பட்ட திடீர் வாக்குவாதமும் சலசலப்பும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக முதல்வர் தங்களது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்குக் கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீதக் கடனையும் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்ட வாக்குறுதியை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்றும், அதனை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாகியும், அதற்கான பணத் தொகை இன்னும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை. இதனால் தங்களுக்குக் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள், அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து நிலுவைத் தொகையை விரைந்து வழங்கக் கோரி முழக்கமிட்டனர்.

கேமரா சலசலப்பும் பொதுமக்கள் அவதியும்: ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்கள் மற்றும் நிருபர்கள் செய்தி சேகரிப்பதற்காக வீடியோ எடுப்பதைக் கண்ட விவசாயிகள், “நான் தான் பேசுவேன், நான் தான் பேசுவேன்” என்று தங்களுக்குள்ளேயே சைகை காட்டி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், அலுவலகத்தின் முக்கிய நுழைவாயிலை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்களும், அரசுத் துறை அலுவலர்களும் உள்ளே செல்ல முடியாமல் தங்களது அன்றாடப் பணிகளைச் செய்யப் பெரிதும் அவதிப்பட்டனர்.

NO COMMENTS

Exit mobile version