செங்கல்பட்டு அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற கொடூர விபத்தில், நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் ஆனைமேல் அகரம் பகுதியை சேர்ந்தவர் ரியாசுதீன் ( 38 ). துபாயில் வேலைபார்த்த இவர், விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்து, மீண்டும் துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். தனது வீட்டிலிருந்து தனது நண்பர் மற்றும் உறவினருடன் காரில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார். ரியாசுதீன் நண்பரான சந்துரு என்பவர் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.
அவருடன் ரியாசுதீன் நண்பர்கள் ஐயப்பன் மற்றும் உறவினர் அன்வர் ஷாதிக் ஆகியோர் வந்துள்ளனர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி அருகே அதிகாலையில் வாகனம் திடீரென பஞ்சர் ஆகி உள்ளது. இதனைத் தொடர்ந்து சாலை ஓரத்தில் காரை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, வாகனத்தை ஓட்டி வந்த சந்துரு மற்றும் ரியாசுதீன் ஆகியோர் இணைந்து டயரை மாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அதே திசையில் இருந்து அதி வேகமாக வந்த கார் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த கொடூர விபத்தில் ரியாசுதீன் மற்றும் சந்துரு ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மற்ற இருவரும் அங்கிருந்து தள்ளி நின்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
செங்கல்பட்டு பகுதியில் நடந்த இந்த கொடூர விபத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டறியும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.








