ஒரு கடைக்குச் சென்றால் ‘உங்கள் பொருளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல’ என்று எழுதப்பட்டிருக்கும்; அதைப்போலத்தான் தற்போதைய தவெக ஆட்சியின் அவல நிலை உள்ளது” என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி, தேர்தல் களத்தில் பணியாற்றிய மகளிரைப் பாராட்டும் விதமாக திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது மேடையில் பேசிய கனிமொழி எம்பி, தமிழ்நாட்டில் எந்த ஆட்சி மாற்றம் வந்தாலும் அதைப் பற்றித் தமக்கு எவ்விதக் கவலையும் இல்லை என்றும், ஆனால் தற்போதைய அரசு முறையாகப் பொறுப்பேற்றுச் செயல்படுகிறதா என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். புதிய ஆட்சி அமைந்து குறுகிய காலத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட படுகொலைகளும், பாலியல் குற்றங்களும் அரங்கேறியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வரும் வேளையில், எதற்கெடுத்தாலும் யார் மீது பழி போடலாம் என்று காரணங்களைத் தேடிக்கொண்டிருந்தால் எவ்வித மாற்றமும் வராது என்று கறாராக விமர்சித்தார். எது நடந்தாலும் மற்றவர்கள் மீது பழி போடாமல் நேர்மையுடன் ஆட்சி நடத்தியவர் கலைஞர் என்றும், அதே வழியில்தான் மு.க.ஸ்டாலினும் திறம்படச் செயல்பட்டார் என்றும், தற்போதைய ஆட்சியாளர்கள் முதலில் தங்களது கடமைகளுக்குப் பொறுப்பேற்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், பெண்களின் உரிமைக்காகவும், அவர்கள் சமூக வேலிகளை உடைத்து வாழ வேண்டும் என்பதற்காகவும் தந்தை பெரியாரின் சிந்தனைகளை ஆட்சியில் அமர்ந்து செயல்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி என்று கனிமொழி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சம உரிமை, கிராமப்புறங்களில் பள்ளிகள் மற்றும் அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை கலைஞர் உருவாக்கினார் என்றும், அதனைத் தொடர்ந்து வந்த மு.க.ஸ்டாலின் அந்த இடஒதுக்கீட்டை மேலும் அதிகப்படுத்திக் கொடுத்துப் பெண்களுக்கான உன்னத மாற்றத்தை ஏற்படுத்தினார் என்றும் அவர் விவரித்தார். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தன் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாட்டின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் ஒரே தலைவர் கலைஞர் மட்டும்தான் என்றும் கனிமொழி எம்பி தனது உரையில் திட்டவட்டமாக முழங்கினார்.
