படாளத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம் அருகே கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார். உடலில் வெட்டு காயங்கள் இருந்ததால் கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் செங்கல்பட்டு அடுத்துள்ள படாளம் காவல் எல்லைக்குட்பட்ட குமாரவாடி பகுதியில், கொலை செய்யப்பட்ட நபர் கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமார் (44) என தெரிய வந்தது. இக்கொலை தொடர்பாக, தாம்பரம் மாநகராட்சியின் 45வது வார்டு கவுன்சிலரும் திமுகவைச் சேர்ந்தவருமான தாமோதரன் உட்பட 6 பேரை படாளம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கவுன்சிலர் மனைவியுடன் கொலை செய்யப்பட்ட குமார் பழகி வந்ததாகவும். கணவருக்கு தெரியாமல் சொத்துகளை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைத்த பணத்தை குமாரிடம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், கடந்த 21ஆம் தேதி குமாரை நட்பாகப் பேசி அழைத்துக் கொண்டு படாளம் வந்த கவுன்சிலர் தாமோதரன், மதுவைக் குடிக்க வைத்து சொத்துகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தை வழங்குமாறு குமாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தன்னிடம் பணம் இல்லை எனக் குமார் கூறியதால், கவுன்சிலர் மற்றும் அவருடன் இருந்த நபர்கள், குமாரைக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.
இதன்பேரில், கவுன்சிலர் மற்றும் அவருடைய நண்பர்கள் 5 பேரைக் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
