தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மதுராந்தகம் திமுக வேட்பாளர் அமுல் பொன்மலர் இன்று ரயில் நிலையத்தில் பயணிகளிடம் நேரடியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மதுராந்தகம் தனித் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரச்சாரத்திற்கு இன்னும் மிகக் குறைந்த காலமே இருப்பதால், திமுக வேட்பாளர் அமுல் பொன்மலர் இன்று மதுராந்தகம் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் நேரடியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மதுராந்தகம் திமுக நகர மன்றத் தலைவர் குமார் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில், வேட்பாளர் அமுல் பொன்மலர் ரயில் நிலைய நடைமேடையில் காத்திருந்த பயணிகளிடமும், ரயிலுக்குள் அமர்ந்திருந்த மக்களிடமும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினார். அப்போது பயணிகளுடன் கைகுலுக்கி அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர், தொகுதியின் முன்னேற்றத்திற்காகத் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மதுராந்தகம் தொகுதியில் நாளை (ஏப்ரல் 21) ஒரு நாள் மட்டுமே பகிரங்க பிரச்சாரத்திற்கு அனுமதி உள்ள சூழலில், வேட்பாளர்கள் அனைவரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளனர். இந்தப் பிரச்சாரத்தின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். ரயில் நிலையத்தில் திரண்டிருந்த பொதுமக்களின் வரவேற்பைப் பார்க்கும்போது, மதுராந்தகம் தொகுதியில் உதயசூரியன் பிரகாசிக்கும் எனத் தொண்டர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
