என் இனிய தமிழ் மக்களே! பாரதிராஜா காலமானார்

0
2

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரும், கிராமிய சினிமாவின் அடையாளமாக விளங்கிய பாரதிராஜா (84) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் பிறந்த பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி. சுகாதார ஆய்வாளராக தனது பணியைத் தொடங்கிய அவர், பின்னர் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைத்து தமிழ் சினிமாவில் தனித்துவமான மாற்றத்தை உருவாக்கினார்.

1977 ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே தமிழக அரசின் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார். ஸ்டுடியோக்களுக்குள் மட்டுமே இருந்த தமிழ் சினிமாவை கிராமப்புற வாழ்க்கையின் நிஜத்தன்மையுடன் திரைக்கு கொண்டு வந்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.

‘கிழக்கே போகும் ரயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். ‘கல்லுக்குள் ஈரம்’ திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கிய ‘முதல் மரியாதை’ திரைப்படம் தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. மேலும், தமிழ் சினிமாவிற்கு ராதா, ராதிகா, ரேவதி உள்ளிட்ட பல முக்கிய நடிகைகளை அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்கே சேரும்.

இயக்கம், தயாரிப்பு, கதாசிரியர், நடிகர் என பன்முக திறமைகளை வெளிப்படுத்திய பாரதிராஜாவுக்கு 2004 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ வழங்கப்பட்டது.

“பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா பேசுகிறேன்” என்ற அவரது தனித்துவமான அறிமுக வாசகம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. தனது திரைப்படங்களின் மூலம் கிராமிய வாழ்க்கை, மனித உறவுகள் மற்றும் சமூக உண்மைகளை உயிரோட்டத்துடன் பதிவு செய்தவர் பாரதிராஜா.

மொத்தம் 44 திரைப்படங்களை இயக்கியுள்ள அவர், தமிழ் சினிமாவின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்த படைப்பாளராக என்றும் நினைவுகூரப்படுவார்.