மூன்று சக்கர வாகனம் வழங்கக் கோரி தொலைபேசியில் கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளிக்கு, ஆட்சியர் நேரில் சென்று உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருங்குழி பகுதிக்குட்பட்ட நடராஜ், 2022-ல் விபத்தில் இரு கால்களையும் இழந்ததால் மாற்றுத்திறனாளியாகியவர். தாட்கோ திட்டத்தின் மூலம் ரூ.1,66,500 மானிய வங்கிக் கடன் பெற்று மாவு அரைத்து விற்பனை செய்து சுயதொழில் செய்து வருகிறார். மனைவி எல்லம்மாள் கட்டிடம் வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறார்.
இந்நிலையில், முதல்வரின் ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பயனாளிகளுடன் தொலைபேசியில் நேரடியாக பேசி நிலையை கேட்டறிந்தார். இதில் நடராஜும் இணைந்தார். தன் தொழிலை விரிவுபடுத்த மூன்று சக்கர வாகனம் வழங்க கோரியதோடு, இதற்காக கடந்த ஆண்டு மனு கொடுத்திருப்பதையும் நினைவூட்டினார்.
அதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர், மூன்று சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். மூன்று சக்கர வாகனம் கிடைத்தால் இட்லி மாவை பல இடங்களுக்கு சென்று விற்பனை செய்ய முடியும் என்பதால், இது மிகுந்த உதவியாக இருக்கும் என நடராஜின் மனைவி எல்லம்மாள் தெரிவித்துள்ளார்.








