நீட் தேர்வை ரத்து செய்க! – மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

0
3

நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாநிலங்களே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

நீட் விவகாரத்தில் அவர் மௌனம் காப்பதாக எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது. மருத்துவப் படிப்பிற்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை தொடங்கி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மாநிலங்களின் உரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தல்மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, பிளஸ்-2 மதிப்பெண்ணே தகுதி: நீட் தேர்வு முறையை ரத்து செய்துவிட்டு, தமிழகத்தில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்ட பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ள நிலையில், மாணவர் சேர்க்கையைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் மாநில அரசிடமே ஒப்படைக்க வேண்டும். முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற தொடர் குளறுபடிகள் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதால், இந்தத் தேர்வு முறையிலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளிசட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் பலத்த விமர்சனங்களை முன்வைத்தன.

குறிப்பாக, தவெக அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மத்திய அரசுக்கு நேரடியாகப் பரிந்துரை செய்திருப்பதன் மூலம், நீட் விவகாரத்தில் தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை அவர் உறுதி செய்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகள் வரவேற்புமுதலமைச்சரின் இந்த அறிக்கையைத் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகள் வரவேற்றுள்ளன. கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழகத்தின் நீண்டகாலக் கோரிக்கையான நீட் விலக்கு குறித்து முதலமைச்சர் விஜய் எடுத்துள்ள இந்தத் துணிச்சலான முடிவு, மத்திய அரசிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இனிதான் தெரியவரும். பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடைபெறுவதே சமூக நீதிக்கு வலுசேர்க்கும் எனச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.