தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜய், தனது கன்னிப் பேச்சிலேயே முந்தைய திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். “கஜானாவைச் சுரண்டிவிட்டுச் சென்றுள்ளனர்” என அவர் முன்வைத்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பதவியேற்பு விழா மேடையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், திமுக-வின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், முந்தைய ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தோலுரித்துக் காட்டினார். இதற்கு முன் ஆட்சி செய்த அரசு தமிழகத்தை 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் ஆழ்த்திவிட்டுச் சென்றுள்ளது. கஜானாவைச் சுத்தமாக வழித்து, சுரண்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இத்தகைய இக்கட்டான சூழலில் தான் நாம் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளோம்” என்றார்.
தமிழகத்தின் நிதி நிலைமை எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதைத் தமிழக மக்கள் உண்மையாக உணர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதே தனது முதல் பணியெனக் குறிப்பிட்ட விஜய், ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்:
உள்ளே சென்று பார்த்தால் தான் அவர்கள் செய்துள்ள குளறுபடிகள் முழுமையாகத் தெரியும். எனவே, தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை குறித்து மிக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். ஒவ்வொன்றையும் நான் வெளிப்படையாகவே கையாளுவேன்” என அதிரடியாக அறிவித்தார்.
வழக்கமான அரசியல் உரைகளைப் போலன்றி, முந்தைய அரசின் குறைகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டிய விஜய், “இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான், தப்பு செய்யவும் விடமாட்டான்” என எச்சரிக்கை விடுத்தார். ஆட்சியமைத்த முதல் நிமிடத்திலேயே எதிர்க்கட்சியை நோக்கி அவர் வீசியுள்ள இந்த ‘வெள்ளை அறிக்கை’ ஏவுகணை, வரும் நாட்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய சட்ட ரீதியான மற்றும் அரசியல் ரீதியான விவாதங்களைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.




