Home செங்கல்பட்டு செய்யூர் எல்லையம்மன் கோவில் சந்திப்பில் விபத்து அபாயம்: பேரிகார்டு அமைக்க கோரிக்கை

செய்யூர் எல்லையம்மன் கோவில் சந்திப்பில் விபத்து அபாயம்: பேரிகார்டு அமைக்க கோரிக்கை

0

செய்யூர் அருகே உள்ள எல்லையம்மன் கோவில் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்து அபாயம் நிலவுவதால், உடனடியாக பேரிகார்டுகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சியில் அமைந்துள்ள எல்லையம்மன் கோவில் பகுதி, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மேல்மருவத்தூர் செல்லும் நெடுஞ்சாலை இணையும் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், கடலோர மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சுற்றுலா பாதையாகவும் இந்த சாலை பயன்பட்டு வருகிறது.

முன்னதாக, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், சாலை விபத்துகளை தவிர்க்கவும் அப்பகுதியில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மேல்மருவத்தூர் சாலையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை கடக்கும் வாகனங்கள் திடீர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக பேரிகார்டுகளை மீண்டும் அமைத்து, வாகன வேக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version