செட்டிப்புண்ணியம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் பணி தொடக்கம்

0
4

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகே உள்ள செட்டிப்புண்ணியம் ரயில்வே கேட் பகுதியில் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த மேம்பாலம் கட்டுமானப் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

மகேந்திரா வேர்ல்டு சிட்டி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் தொழிற்சாலைகள், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

செங்கல்பட்டு – சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள செட்டிப்புண்ணியம் ரயில்வே கேட் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் ஜி.எஸ்.டி. சாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனை தவிர்க்க 2018-19ஆம் ஆண்டு ரூ.26.26 கோடி நிதியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. 1 கிலோமீட்டர் நீளத்தில் 40 அடி அகலத்துடன் சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட உள்ளது.

நிலம் கையகப்படுத்தல் தாமதம் காரணமாக பணிகள் நீண்ட காலம் நிலுவையில் இருந்த நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 18 மாதங்களில் மேம்பாலப் பணி நிறைவடையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.