செங்கல்பட்டு நகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நீண்ட நாட்களாக செயல்படாமல் கிடப்பில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அண்ணா சாலையில் நகராட்சி தீர்மானத்தின் அடிப்படையில் இந்த சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை.
இந்த நிலையம் செயல்படத் தொடங்கியிருந்தால், தூய்மையான குடிநீர் வழங்கலில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால், திறக்கப்படாமல் இருப்பதால் திட்டத்தின் பயன் பொதுமக்களுக்கு எட்டாத நிலையில் உள்ளது.
இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும், அதற்கு இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் குடிநீர் தேவைகள் அதிகரிக்கும் நிலையில், இந்த நிலையம் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
