செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது இடங்களில் அமைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், எஸ்.பி., சாய் பிரணீத், சார் ஆட்சியர் நாராயணசர்மா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். விநாயகர் சிலை நிறுவுவதற்கான அனுமதி வழங்குவதற்கு, செங்கல்பட்டு சார் ஆட்சியர், மதுராந்தகம், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில், வருவாய், காவல் துறை, தீயணைப்பு துறை, உள்ளாட்சி துறையினர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர், விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான விண்ணப்பம் செய்வோருக்கு, உடனடியாக பரிசீலனை செய்து, அனுமதி வழங்க வேண்டும் என்றும், சிலைகள் கரைக்கும் பகுதியில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருக்க, மருத்துவத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டார்.
விழா தொடர்பாக, சிலை அமைப்பாளர்கள் தகவல்களை தெரிவிக்கலாம் என்றும், சிலைகள் வைக்கும் இடங்களில், தன்னார்வலர்கள் இரண்டு பேர், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட வேண்டும். எஸ்.பி மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை கண்காணிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விநாயகர் சிலைகளை, மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள திருக்கழுக்குன்றம் தாலுகாவில், மாமல்லபுரம் கடற்கரை மற்றும் செய்யூர் தாலுகாவில் வடபட்டினம்குப்பம் ஆகிய பகுதிகளில் கரைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
