எதிர்கால விஞ்ஞானிகளின் அணிவகுப்பு: செங்கல்பட்டு பள்ளியில் ரோபோட்டிக்ஸ் சைபர் காட்சி!

0
1

செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் ‘ரோபோட்டிக் சைபர் காட்சி’களின் அணிவகுப்பு கடந்த சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. நவீன தொழில்நுட்ப உலகில் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்த இந்த விழாவில், பல்வேறு வகைப்பாடுகளில் ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்தச் சிறப்பு வாய்ந்த கண்காட்சியை மகேந்திரா நிறுவனத்தின் வாகன மின்னணு மற்றும் மென்பொருள் பிரிவின் முதன்மைப் பொறியாளர் புனீத் மேத்தா குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். விழாவில் வித்யாசாகர் கல்வி குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா மற்றும் பள்ளியின் முதல்வர் வி.சி. கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். மாணவர்களின் தொழில்நுட்பத் திறனைப் பாராட்டிய சிறப்பு விருந்தினர், வருங்காலப் பொறியாளர்களுக்குத் தொழில்நுட்பத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

முன்னதாக, பள்ளியின் மாணவர்கள் ஹர்ஷவர்தன் மற்றும் அனிஷா ஆகியோர் வரவேற்புரை வழங்கினர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு ரோபோட்டையும் ஆய்வு செய்த புனீத் மேத்தா, அவற்றில் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த படைப்புகளைத் தேர்வு செய்து, அவற்றை உருவாக்கிய மாணவர்களுக்குச் சான்றிதழ்களையும் கேடயங்களையும் வழங்கி கௌரவித்தார். விழாவின் நிறைவாக மாணவி தோஷினி ஸ்ரீ நன்றி கூறினார். பள்ளி மாணவர்களின் இந்த நவீனப் படைப்புகள் பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.