Home செங்கல்பட்டு “மாணவர்கள் உயிருக்கு ஆபத்தா?”: பாதாள சாக்கடையால் பெற்றோர் பீதி!

“மாணவர்கள் உயிருக்கு ஆபத்தா?”: பாதாள சாக்கடையால் பெற்றோர் பீதி!

0

செங்கல்பட்டு நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையும் அச்சமும் எழுந்துள்ளது.

செங்கல்பட்டு நகராட்சிக்கான பாதாள சாக்கடை திட்டப் பணிகள் சுமார் 97.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) மூலம் தற்பொழுது நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நகரின் பெரும்பாலான முக்கியச் சாலைகள் பாதாள சாக்கடை குழாய்கள் பதிப்பதற்காகத் தோண்டப்பட்டு, ஆங்காங்கே ஆபத்தான முறையில் பெரிய பள்ளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ஜல்லிக்கற்கள், மணல் மூட்டைகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் சாலையோரங்களை ஆக்கிரமித்துக் குவிக்கப்பட்டிருப்பதுடன், பணிகள் முழுமையாக நிறைவடையாமல் அரைகுறையாகக் காட்சியளிக்கின்றன.

இன்னும் இரு தினங்களில் புதிய கல்வியாண்டிற்காகப் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தினமும் பள்ளிக்குச் செல்லும் சிறியவர்கள், சைக்கிளில் செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் இந்தச் சாலைகளால் கடும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சப்படுகிறது. தற்காலிகமாகக்கூடச் சாலைகள் சமன்படுத்தப்படாததால், பள்ளி வழித்தடங்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய மிக மோசமான அபாயம் நிலவுகிறது.

எனவே, செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தை அவசரகாலப் பிரச்சினையாகக் கவனத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே பள்ளி வழித்தடங்களில் உள்ள பள்ளங்களை மூடுதல், எச்சரிக்கை பலகைகள் அமைத்தல் மற்றும் தற்காலிக சாலை சீரமைப்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கறாராக வலியுறுத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version