செங்கல்பட்டு: உளுந்து கொள்முதல் தொடக்கம் – விவசாயிகளுக்கு அழைப்பு

0
10

செங்கல்பட்டு மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு உளுந்து கொள்முதல் திட்டத்தை அறிவித்துள்ளது. விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாய் அதிகரிக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு எனப்படும் NAFED மூலம் உளுந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 200 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ளூர் சந்தைகளில் ஒரு கிலோ உளுந்து ரூ.75 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், தமிழக அரசு தரமான உளுந்துக்கு கிலோவிற்கு ரூ.78 என்ற நிர்ணய விலையில் கொள்முதல் செய்ய உள்ளது. இதனால் விவசாயிகள் நியாயமான விலையை பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் காஞ்சிபுரம் விற்பனை குழுவின் கீழ் செயல்படும் மதுராந்தகம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் உளுந்து தரம் பிரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் முன்பதிவு செய்ய வேண்டும். இதற்காக மதுராந்தகம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளர் சி.வீரயகம் அவர்களை 9444707084 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

அரசின் வழிகாட்டுதலின்படி, ஒரு ஏக்கர் சாகுபடிக்கு அதிகபட்சமாக 185 கிலோ உளுந்து மட்டுமே கொள்முதல் செய்யப்படும். இந்த திட்டம் வரும் ஜூலை 9, 2026 வரை அமலில் இருக்கும் என்றும், கொள்முதல் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, செங்கல்பட்டு மாவட்ட உளுந்து விவசாயிகள் விலை ஆதார திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.