செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியுள்ள சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளிட்டது. இந்த கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரனூரில் சுங்கச் சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் 10 வரை உயர்ந்துள்ளது. ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் ரூ.45 முதல் 200 வரை உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை உயர்ந்துள்ளது.
அதேபோல் ஆத்தூர் சுங்கச் சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.60 முதல் ரூ.190 வரை உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
