Home செங்கல்பட்டு செங்கல்பட்டு–தாம்பரம் ரயில் நிலையங்களில் குடிநீர் இன்றி பயணிகள் அவதி

செங்கல்பட்டு–தாம்பரம் ரயில் நிலையங்களில் குடிநீர் இன்றி பயணிகள் அவதி

0

செங்கல்பட்டு–தாம்பரம் புறநகர் ரயில் பாதையில் உள்ள பல ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி இல்லாததால் தினசரி பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐந்து நகராட்சிகளும் எட்டு ஊராட்சி ஒன்றியங்களும் உள்ள நிலையில், வேலை, கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் தேவைகளுக்காக தினமும் லட்சக்கணக்கான மக்கள் சென்னை நோக்கி பயணம் செய்கிறார்கள். அதேபோல் சென்னை நகரிலிருந்து மறைமலை நகர், பொத்தேரி, கிளாம்பாக்கம், மகேந்திரா சிட்டி போன்ற புறநகர் பகுதிகளுக்கும் பெருமளவில் மக்கள் வருகை தருகின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளில் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளதால், பேருந்து சேவையை விட புறநகர் மின்சார ரயில்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த முக்கியமான ரயில் பாதையில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாதது பயணிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை உள்ள சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், பொத்தேரி உள்ளிட்ட ஒன்பது ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி இல்லை அல்லது செயலிழந்த நிலையில் உள்ளது. குறிப்பாக காட்டாங்கொளத்தூர் மற்றும் சிங்கபெருமாள் கோவில் நிலையங்களில் உள்ள குடிநீர் இயந்திரங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்தே உள்ளன. இதனால் பயணிகள் தண்ணீர் இல்லாமல் அவதியடைகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பாதையில் பயணம் செய்யும் நிலையில், குடிநீர் போன்ற அடிப்படை வசதி இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே, ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு அனைத்து நிலையங்களிலும் குடிநீர் தொட்டிகள் மற்றும் இயந்திரங்களை சீரமைத்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version