செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் வாகனங்கள் நிறுத்த தடை

0
2

செங்கல்பட்டு ரயில் நிலைய வளாகத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அனுமதியின்றி நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் அறிவித்துள்ளனர். இந்த உத்தரவை மீறுவோருக்கு ரயில்வே சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு ரயில் நிலையம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில் சந்திப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னை, அரக்கோணம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் விரைவு ரயில்கள் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ரயில் நிலையம் வழியாக பயணம் செய்கிறார்கள்.

ரயில் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த மூன்று தனிப்பட்ட பார்க்கிங் வசதிகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது வாகனங்களை அங்கு நிறுத்திவிட்டு ரயிலில் பயணம் செய்கின்றனர். ஆனால் பார்க்கிங் பகுதிகளில் இடமின்றி போகும் சூழலில் பலர் ரயில் நிலைய வளாகத்தின் பல இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் திருடப்படுவதாக சமீபத்தில் புகார்கள் மற்றும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக ரயில்வே போலீசார் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.

ரயில்வே வளாகத்தில் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்றும், மீறினால் ரயில்வே சட்ட பிரிவு 159ன் கீழ் அபராதம் அல்லது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.