படுஜோராக மாறும் செங்கல்பட்டு ரயில் நிலையம் – இத்தனை வசதியா?

0
4

செங்கல்பட்டு ரயில் நிலையம் ரூ.22.14 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருவதால், பயணிகளும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெரும்பாலான நபர்கள் ஐ.டி ஊழியர்களாகவும், தனியார் நிறுவன ஊழியர்களாகவும், தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களாகவும் உள்ளனர். செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்களை பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தை தினமும் சுமார் 60 ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். தென் மாவட்டத்திற்கு செல்வதற்கு பிரதான ரயில் நிலையம் ஆகவும் செங்கல்பட்டு ரயில் நிலையம் உள்ளது. இதனால் செங்கல்பட்டு ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வந்தது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு ரயில் நிலையம் முழுமையாக புனரமைக்கப்பட்டு அதை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில், உத்தரவாதமும் கொடுக்கப்பட்டது.

அதன்படி, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையத்தை மறு சீரமைக்க சுமார் 22.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்பொழுது கட்டிடங்கள், நுழைவு வாயில் புதுப்பிக்கும் பணிகள், துவங்கி நடைபெற்று வருகின்றன. பயணிகள் தங்குவதற்கு என மூன்று ஓய்வு அறைகள் கட்டப்பட உள்ளன. பயணிகள் தங்கும் ஓய்வு அறையில் ஏசி வசதி செய்யப்பட உள்ளன, அதே போன்று ஏசி வசதியுடன் காத்திருக்கும் அறைகள், கூடுதல் வாகனம் இருக்கும் வசதி, அதிநவீன தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் தகவல் பலகைகள், லிப்ட் மற்றும் எக்ஸ்குலேட்டர் வசதிகள், ஆகியவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முக்கியமாக ரயில் நிலையம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.