செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான 23 லட்சம் கோணிப்பைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோணிப்பை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்த நெல் கொள்முதல் பணிகள் தற்போது மீண்டும் சீராக நடைபெற உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலூர், தாம்பரம் மற்றும் பல்லாவரம் உள்ளிட்ட தாலுகாக்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. குறிப்பாக மதுராந்தகம், செய்யூர் மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதிகளில் ஏரி, கிணறு மற்றும் ஆற்றுநீர் பாசனத்தை நம்பி பரவலாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் மாவட்டம் முழுவதும் 171 தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தாண்டு மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 10ஆம் தேதி வரை 1.30 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருப்போரூர், மதுராந்தகம் மற்றும் ஒரகடம் பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களில் கோணிப்பை பற்றாக்குறை ஏற்பட்டதால், நெல் கொள்முதல் பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து விவசாயிகள் செங்கல்பட்டு கலெக்டர் மாலதி ஹெலனிடம் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கையாக மாவட்டத்திற்கு தேவையான 23 லட்சம் கோணிப்பைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக சேமிக்க ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.





