செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட நீண்ட நேர மின்தடை காரணமாக நோயாளிகள் கடும் அவதிக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை சுமார் 10 மணியளவில் மருத்துவமனையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், சி.டி. ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே உள்ளிட்ட அத்தியாவசிய பரிசோதனைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
செங்கல்பட்டு நகரம் மட்டுமின்றி மதுராந்தகம், செய்யூர், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஏற்பட்ட மின்தடை காரணமாக அவசர சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
குறிப்பாக விபத்தில் சிக்கி எலும்பு முறிவு மற்றும் பலத்த காயங்களுடன் வந்த நோயாளிகள், ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுக்க முடியாமல் வலியுடன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மின்சாரம் இல்லாததால் பரிசோதனை கருவிகள் செயலிழந்து, சிகிச்சை தாமதமானதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இவ்வளவு பெரிய அரசு மருத்துவமனையில் அவசர கால ஜெனரேட்டர் மற்றும் மாற்று மின்சார வசதிகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. “பண வசதி இருந்தால் தனியார் மருத்துவமனைக்கு சென்றிருப்போம். ஏழை மக்கள் என்ன செய்வார்கள்?” என நோயாளியின் உறவினர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகமும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





