இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை நிலைப்படுத்தவும், தேவையற்ற இறக்குமதிகளைக் குறைக்கவும் மத்திய அரசு தங்க இறக்குமதி விதிகளைத் தற்போது மேலும் கடுமையாக்கியுள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்திய கையோடு, ஒரு உரிமத்திற்கு அதிகபட்சமாக 100 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்ற புதிய உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் கடந்த மே 13 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான அடிப்படை இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனுடன் வேளாண் உள்கட்டமைப்பு வரி (AIDC) உள்ளிட்ட இதர வரிகளையும் சேர்த்து, ஒட்டுமொத்த இறக்குமதி வரி 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது உடனடி அமலுக்கு வந்துள்ளது.
நகை ஏற்றுமதியாளர்கள் வரி இன்றி தங்கம் இறக்குமதி செய்யப் பயன்படும் ‘அட்வான்ஸ் ஆத்தரைசேஷன்’ (AA) திட்டத்தின் கீழ் புதிய கட்டுப்பாடுகளை வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகம் (DGFT) விதித்துள்ளது.
அளவீடு: இனி ஒரு உரிமத்தின் (License) கீழ் அதிகபட்சமாக 100 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். இதற்கு முன்பு இத்திட்டத்தில் அளவு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. அடுத்த உரிமத்தைப் பெற வேண்டுமானால், முந்தைய உரிமத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தை நகைகளாக ஏற்றுமதி செய்திருக்க வேண்டும்.
முதல் முறையாக இந்த உரிமத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் உற்பத்தி ஆலைகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு (Physical Inspection) செய்த பின்னரே அனுமதி வழங்கப்படும். உரிமம் பெற்றவர்கள் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை தங்களது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி குறித்த விபரங்களை ‘சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்’ (CA) சான்றிதழுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. அந்நியச் செலாவணி வெளியேறுவதைத் தடுக்கவும், தங்கம் கடத்தப்படுவதைக் குறைக்கவும் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வரி உயர்வு மற்றும் கட்டுப்பாடுகளால் உள்நாட்டில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என நகை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
