Home செங்கல்பட்டு விவசாய நிலங்களை விழுங்கும் ஆப்பூர் குப்பைக்கிடங்கு: கிணறுகள் பாழாகி விவசாயி கண்ணீர்!

விவசாய நிலங்களை விழுங்கும் ஆப்பூர் குப்பைக்கிடங்கு: கிணறுகள் பாழாகி விவசாயி கண்ணீர்!

0

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சியில் சுமார் 44 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் குப்பைக்கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு செங்கல்பட்டு மட்டுமன்றி தாம்பரம், பல்லாவரம், குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் லாரிகள் மூலம் டன் கணக்கில் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இங்கு குப்பைக்கிடங்கு அமைக்கக் கூடாது என்றும், துர்நாற்றத்தால் பொதுமக்களின் சுகாதாரம் சீர்கெடுகிறது என்றும் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். ஆனால் மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுத் தொடர்ந்து குப்பைக்கிடங்கு செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இக்குப்பைக்கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை அழிக்க 35.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயோமைனிங் திட்டம் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பழைய குப்பைகள் ஓரளவுக்குக் குறைக்கப்பட்டாலும், நாள்தோறும் புதிதாக வரும் குப்பைகளின் வரத்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் ஆப்பூர் குப்பைக்கிடங்கு 44 ஏக்கர் பரப்பளவையும் தாண்டி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் குப்பைகள் கொட்டப்படுகிறது. அதேபோல் குப்பைகளிலிருந்து வரும் கழிவுநீர் விவசாய நிலத்திற்குள் நேரடியாகச் செல்கிறது. இதனால் அப்பகுதியில் பல தலைமுறைகளாக நடந்து வந்த விவசாயத் தொழில் தற்போது முற்றிலும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, அதே பகுதியைச் சேர்ந்த துரைபாபு (51) என்ற விவசாயி தனது நிலத்தில் வழக்கம்போல விவசாயம் செய்து வந்துள்ளார். ஆனால் தற்போது குப்பைக்கிடங்கின் கழிவுகள் அனைத்தும் அவரது விவசாய நிலத்திற்குள் புகுந்துள்ளன. மேலும் குப்பைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுநீர் விவசாய நிலம் முழுவதும் பாய்ந்ததால் அவரது இரண்டு விவசாயக் கிணறுகளும் முற்றிலும் சேரும் சகதியுமாக மாறிப் பயன்படுத்த முடியாத அளவிற்கு நச்சுத்தன்மை அடைந்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். தனது வாழ்வாதாரமான விவசாய நிலமும் கிணறும் பாழானது குறித்துத் துரைபாபு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை அதிகாரிகள் தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

NO COMMENTS

Exit mobile version