அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைவிட 0.1 சதவீதம் தேர்ச்சி விகிதம் உயர்ந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்த அவர், திருச்சி மாவட்டம் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் 5வது இடமும், அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 3வது இடமும் பெற்றிருப்பது பெருமைக்குரியது என்றார்.
மேலும், தேர்வு முடிவுகள் வாழ்க்கையின் முடிவல்ல என்றும், தோல்வியடைந்த மாணவர்கள் மனம் தளராமல் துணைத்தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பின்னர் பிஎம்ஸ்ரீ திட்டம் குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கையே போதுமானது என கூறினார். எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்கக்கூடாது என்றும், தமிழ்நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
