Home செங்கல்பட்டு அம்மா உணவகங்களில் முழு மதிய உணவு வழங்க மாநகராட்சி பரிந்துரை

அம்மா உணவகங்களில் முழு மதிய உணவு வழங்க மாநகராட்சி பரிந்துரை

0

தமிழகத்தின் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கி வரும் அம்மா உணவகங்களில் முக்கிய மாற்றங்களை கொண்டு வர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள், குறைந்த செலவில் தரமான உணவு வழங்கும் திட்டமாக பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது சென்னை மாநகராட்சியில் 383 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அம்மா உணவகங்களை பயன்படுத்தும் மக்களிடையே நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், உணவு வகைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, காலை மற்றும் மாலை நேரங்களில் இட்லியுடன் சாம்பார் மட்டுமல்லாமல் சட்னியும் வழங்க வேண்டும் என அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும், மதிய உணவாக சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், அப்பளம் அல்லது ஊறுகாய் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான உணவு வழங்கலாம் என்றும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்படும் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம் போன்றவற்றுக்கு மாற்றாக இந்த திட்டம் அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

விலையிலும் மாற்றம் செய்ய அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். தற்போது ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் இட்லியின் விலையை 2 ரூபாயாக உயர்த்தலாம் என்றும், மதிய உணவுக்கான விலையை 15 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலானோர், தரமான உணவு வழங்கப்பட்டால் ஒரு நாளுக்கு 40 ரூபாய் வரை செலவிட தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். அம்மா உணவகங்களில் சுகாதாரம், உணவின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்தினால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த பரிந்துரைகள் குறித்து தமிழக அரசு விரைவில் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version