செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வேலாமூர் ஊராட்சியில் உள்ள ராமாபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுவதால், அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மக்கள் நலனை கருத்தில் கொண்டு சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 லட்சம் செலவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டது. உடற்பயிற்சி கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, இருக்கை வசதி, எல்இடி விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் இந்த பூங்கா உருவாக்கப்பட்டது.
தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த பூங்காவை பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் அதன் நிலை மோசமடைந்துள்ளது. குறிப்பாக உடற்பயிற்சி கருவிகள் மற்றும் குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் பலவும் சேதமடைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளன. நடைபயிற்சி மேற்கொள்ள அமைக்கப்பட்ட சிமென்ட் கான்கிரீட் பாதையும் இடிந்து சேதமடைந்துள்ளது.
மேலும், இரவு நேரங்களில் இந்த பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பூங்கா வளாகத்தில் உடைந்த மது பாட்டில்கள் சிதறி கிடப்பதால், அங்கு நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்த பிரச்சினையைத் தீர்க்க அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
எனவே, சிதிலமடைந்த அம்மா பூங்காவை உடனடியாக சீரமைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





