ஆந்திராவில் உற்பத்தியாகிறது இந்தியாவின் 5-ம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ போர் விமானம்!

0
1

இந்தியப் பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் ஐந்தாம் தலைமுறை அதிநவீன ‘ஸ்டெல்த்’ போர் விமானங்களை ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உற்பத்தி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து திட்டமிட்டுள்ளன. இதற்காக ஸ்ரீசத்ய சாய் மாவட்டத்தில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், போர் விமானத் தயாரிப்பில் இந்தியா புதிய உச்சத்தை எட்டவுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மூலம் உருவாக்கப்படவுள்ள இந்த விமானங்கள் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. எதிரி நாடுகளின் ரேடார்களில் சிக்காமல் பறந்து சென்று தாக்குதல் நடத்தும் அதிநவீன ‘ஸ்டெல்த்’ தொழில்நுட்பம் இந்த விமானங்களில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 140 ‘AMCA’ (Advanced Medium Combat Aircraft) போர் விமானங்களை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரம்மாண்டத் திட்டத்திற்காக ஆந்திரப் பிரதேச மாநில அரசு, ஸ்ரீசத்ய சாய் மாவட்டத்தில் 600 ஏக்கர் நிலத்தை DRDO அமைப்புக்கு முறைப்படி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த உற்பத்தி ஆலை அமைப்பதன் மூலம் இந்தியா தனது சொந்தத் தயாரிப்பில் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைக் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இணையவுள்ளது. இது இந்தியாவின் வான்வழிப் பாதுகாப்பை வலுப்படுத்துவது மட்டுமின்றி, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சியையும் கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.