இன்ஸ்டாவில் காதல் மன்னன் – கைக்குழந்தையுடன் கதறி அழும் இளம்பெண்!

0
3

சென்னை கொரட்டூர் பகுதியில் தனது கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வேறு பெண்ணுடன் சென்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டிய மனைவி, காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரட்டூர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்யா என்பவருக்கும் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 3 வயது ஆண் குழந்தை உள்ளது. ஏற்கனவே திருமணம் ஆன லட்சுமியை இரண்டாம் திருமணமாக சத்யா திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சத்யா வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டதாக கூறி லட்சுமி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்த சத்யா, தனது காதலியுடன் காவல்நிலையத்திற்கு வருகை தந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லட்சுமி, காவல் நிலையத்திலேயே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமி, தனது கணவர் instagram மற்றும் facebook மூலம் பல பெண்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், பலருக்கும் மெசேஜ் அனுப்பி பழகி வருவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தனது முதல் கணவருக்கு பிறந்த 16 வயது மகளிடம் சத்யா தவறாக நடந்து கொண்டதாகவும், அதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தவர் என்றும் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் அவர் திருந்தாமல் தொடர்ந்து பெண்களுடன் பழகி வருவதாகவும், தற்போது மற்றொரு பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றுள்ளதாகவும் கூறிய லட்சுமி, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அரசு கூறி வரும் நிலையில், தனது பிரச்சனைக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.