தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக-வில் நிலவி வந்த புகைச்சல் தற்போது பகிரங்கமாக வெடித்துள்ளது. சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட மோதலால், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இரு அணிகளாகப் பிரிந்து தற்காலிகச் சபாநாயகரிடம் தனித்தனியாக ஆதரவுக் கடிதம் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத்தில் 47 இடங்களைப் பெற்றுள்ள அதிமுக-வில், தலைமைப் பதவி யாருக்கு என்ற அதிகாரப் போர் இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்ற கையோடு, சட்டசபைக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி இடையே கடும் ‘ஈகோ’ (Ego) யுத்தம் தொடங்கியுள்ளது.
சட்டமன்றத் தற்காலிகச் சபாநாயகரிடம் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இரு பிரிவுகளாகச் சென்று தங்களது ஆதரவுக் கடிதங்களைச் சமர்ப்பித்தனர்.
எடப்பாடி அணி (17 எம்.எல்.ஏ-க்கள்): எடப்பாடி பழனிசாமியைச் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கக் கோரி 17 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவுக் கடிதத்தை வழங்கியுள்ளனர்.
வேலுமணி அணி (30 எம்.எல்.ஏ-க்கள்): மறுபுறம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை முன்னிறுத்தி 30 சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாகக் கடிதம் அளித்துள்ளனர்.
பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் (30 பேர்) வேலுமணியின் பக்கம் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்குத் தலைமைப் பதவியில் பெரும் ‘செக்’ (Check) வைப்பதாகக் கருதப்படுகிறது.
இந்தத் திடீர் திருப்பத்தைத் தொடர்ந்து, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சியின் பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் ஒருபுறம் இருந்தாலும், சட்டமன்றத்திற்குள் அவருக்கு இருக்கும் ஆதரவு குறைந்துள்ளது எடப்பாடி தரப்பிற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அதிமுக ஏற்கனவே பல்வேறு பிளவுகளைக் கண்டுள்ள நிலையில், தற்போது சட்டமன்றத்திற்குள்ளேயே ‘யார் தலைவர்?’ என்ற போர் மூண்டுள்ளது. 30 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்றுள்ள வேலுமணி தரப்பு, ஜனநாயக முறைப்படி தங்களை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதனால், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறப்போவது எந்தத் தரப்பு அல்லது அதிமுக-வின் சட்டமன்றச் செயல்பாடுகள் எப்படி அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தயாராகி வரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான அதிமுக-வில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்குச் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.




