முருங்கை பாலமுருகன் கோவில் வைகாசி கிருத்திகை விழா

0
2

அச்சிறுபாக்கம் அருகே முருங்கை கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவில் கோவிலில் வைகாசி கிருத்திகை விழா நேற்று பக்தி பரவசத்துடன் விமரிசையாக நடைபெற்றது.

முருங்கை பாலமுருகன் கோவிலில் நடைபெற்ற இந்த வைகாசி கிருத்திகை பால் காவடிப் பெருவிழா, நேற்று முன்தினம் பரணி விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை 7.30 மணியளவில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மாலை 3 மணியளவில் காவடி பூஜை நடைபெற்றது. விரதம் இருந்து காப்பு அணிந்திருந்த ஏராளமான பக்தர்கள் பால் காவடி, வேல் காவடி, மயில் காவடி, பால் குடங்கள், புஷ்பரதங்கள் மற்றும் அன்னக்காவடிகள் எடுத்து மாட வீதிகளில் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேத பாலமுருகனுக்கு மகா சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கோவிலில் முழுவதும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு “அரோகரா” முழக்கத்துடன் பக்தி உற்சாகத்தில் ஈடுபட்டனர்.

இரவு நேரத்தில் மலர்கள் மற்றும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் அச்சிறுபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தன.