Home செங்கல்பட்டு அச்சிறுபாக்கம்: பேருந்து நிழற்குடை அமைக்க பயணிகள் கோரிக்கை

அச்சிறுபாக்கம்: பேருந்து நிழற்குடை அமைக்க பயணிகள் கோரிக்கை

0

அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அச்சிறுபாக்கம் பகுதியில் சென்னை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையில் பேருந்து நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. சென்னை செல்லும் மார்க்கத்தில், தேசிய நெடுஞ்சாலையோரம் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனம் சார்பில் நிழற்குடை அமைக்கப்பட்டது.

ஆனால், அந்த நிழற்குடை அமைந்த இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு, தற்போதைய இடத்திலிருந்து சுமார் 100 அடி தூரத்தில் மாற்று இடத்தை தேர்வு செய்தனர்.

எனினும், புதிய இடத்தில் இதுவரை நிழற்குடை அமைக்கப்படாததால், பயணிகள் வெயில் மற்றும் மழையில் நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய நிழற்குடையை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version