விவசாய நிலங்களிலேயே காய்கறி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

0
2

செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் காய்கறி பயிரிடும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மலர்விழி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வேளாண்மை துணை இயக்குநர் சுரேஷ், கூட்டுறவு கடன் சங்க செயலர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள், மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளை பெரும்பாலும் தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலை இருப்பதால், உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்தனர். இதனைத் தவிர்க்க, கூட்டுறவுத்துறை நேரடியாக விவசாய நிலங்களுக்குச் சென்று காய்கறிகளை கொள்முதல் செய்து, சந்தையில் நல்ல விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும், இயற்கை விவசாய முறையில் காய்கறி, பூக்கள் மற்றும் கீரை வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும், அதனை ஊக்குவிக்கும் வகையில் கிராமங்களில் காய்கறி கொள்முதல் மையங்கள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு காப்பீட்டு திட்டங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மலர்விழி, மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக காய்கறிகளை வாங்கி, தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், காய்கறி சாகுபடி செய்யப்படும் பகுதிகள் குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தேவையான இடங்களில் காய்கறி விற்பனை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். விவசாயிகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினால், கூட்டுறவுத்துறை மூலம் காய்கறி விற்பனையில் நல்ல லாபம் ஈட்டும் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.