SSC CGL தேர்வுக்கு இலவச பயிற்சி: செங்கல்பட்டு இளைஞர்களுக்கு அழைப்பு

0
4

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வான (Combined Graduate Level – CGL) 2026 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மே 21 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான கணினி வழித் தேர்வு (CBT Tier-I) 2026 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.

இத்தேர்வில் பங்கேற்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 18 முதல் 30 வயது வரை ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு (SC/ST) 5 ஆண்டுகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு SSC CGL தேர்வின் மூலம் சுமார் 12,256 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 22, 2026 ஆகும்.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வாளர்கள் பயனடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் 15, 2026 (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்படுகின்றன.

இந்த பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும். வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் பாடத்திட்ட பயிற்சி, மாதிரித் தேர்வுகள் மற்றும் பயிற்சி குறிப்புகள் வழங்கப்பட உள்ளன.

பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தேர்வர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தரைத்தள டி-பிளாக்கில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு 044-27426020, 9499055895, 9344738148, 8248185171, 8122140214 மற்றும் 9486870577 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இத்தகவலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் மு. வீரப்பன் தெரிவித்துள்ளார்.