செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் 12 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று பெருச்சாளியை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நீண்ட அளவிலான சாரைப்பாம்பு ஒன்று பெருச்சாளியை பிடித்தபடி நகர்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பாம்பு பிடித்திருந்த பெருச்சாளியை முழுமையாக விழுங்க முடியாமலும், அதே நேரத்தில் அதை வெளியே விட முடியாமலும் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அது அங்கும் இங்கும் நகர்ந்தபடி காணப்பட்டது.
இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்தனர். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டு பாம்பை வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
மக்கள் அதிகம் கூடும் மருத்துவமனை அருகே இத்தகைய பெரிய பாம்பு சுற்றித்திரிந்தது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.





