இருளர் குடும்பங்களின் ஆவணங்கள் மூலம் பணம் மோசடி? ஆட்சியரிடம் மனு

0
4

திருக்கழுகுன்றம் வட்டத்தில் வசிக்கும் 47 பழங்குடியின இருளர் குடும்பங்களின் ஆவணங்களை பயன்படுத்தி, நுண் நிதி நிறுவனங்கள் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருக்கழுகுன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின இருளர் குடும்பங்களிடம், கடன் பெற்றுத் தருவதாக கூறி ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஒரு நபர் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த ஆவணங்களை பயன்படுத்தி நுண் நிதி நிறுவனங்கள் மூலம் பல லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட 47 இருளர் குடும்பங்கள் கடன் சுமையால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோசடி செய்யப்பட்ட பணம் தொடர்பாக எந்த தகவலும் வழங்காமல், ஆவணங்களை பெற்ற நபர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும், பழங்குடியின மக்களின் ஆவணங்களை தவறாக பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.