அதிகார போதையா? மக்கள் பணியை மறித்த செங்கல்பட்டு எம்.எல்.ஏ-விற்கு மாவட்ட ஆட்சியர் பதிலடி!

0
5

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென குறுக்கிட்டு அதிகாரிகளின் பணியை மறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த வேளையில், மக்கள் பிரதிநிதியின் இந்த அதிரடி அதிகாரத் தோரணை அங்கிருந்தோரிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியது.

வரிசையில் நின்ற ஏழை மக்கள்: செங்கல்பட்டு மாவட்டத்தின் 6-வது மாவட்ட ஆட்சியராக வீரப்பன் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று திங்கட்கிழமை என்பதால் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களது வாழ்வாதார கோரிக்கை மனுக்களைப் புதிய ஆட்சியரிடம் வழங்கி வந்தனர்.

குறுக்கே புகுந்த எம்.எல்.ஏ: அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள், புதிய ஆட்சியருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். பொதுமக்கள் குறைகளை முறையிட்டுக் கொண்டிருந்த வேளையில், தியாகராஜன் நேரடியாக முகாம் பகுதிக்குள் சென்று, ஆட்சியரின் பணியை இடைமறித்துச் சால்வை போட முயன்றார்.

அரசுப் பணியைத் தொய்வடையச் செய்யும் வகையில் மக்கள் பிரதிநிதி நடந்துகொண்டதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் வீரப்பன் அவர்கள் “எனது அறைக்கு வாருங்கள், அங்கு பேசலாம்” என்று நெறிமுறை தவறாமல் அதே சமயம் அழுத்தமாக எம்.எல்.ஏ-விடம் தெரிவித்தார். சாமான்ய மக்களின் நேரத்திற்கு மதிப்பளிக்காமல் அதிகாரிகளின் கவனத்தைத் திசைதிருப்ப முயன்ற இந்தச் செயல், அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாராட்டைப் பெற்ற அணுகுமுறை: மக்கள் பணியே முக்கியம் என்பதில் உறுதியாக இருந்து, மக்கள் பிரதிநிதிக்குத் தனது அறையிலேயே உரிய மரியாதை அளிக்கப்படும் என்பதை நாசூக்காக உணர்த்திய புதிய மாவட்ட ஆட்சியரின் இந்த நெறிமுறை சார்ந்த அணுகுமுறை சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. வாக்களித்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை விடத் தனக்கான விளம்பரமே முக்கியம் எனச் சட்டமன்ற உறுப்பினர் நினைத்தது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.