அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா ‘அயோக்கியத்தனம்’ என இயக்குனர் அமீர் விமர்சனம்!

0
5

சென்னையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரபல திரைப்பட இயக்குனர் அமீர், தமிழக அரசியல் சூழல், முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு அதிரடியான மற்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தற்போது ஒரு புதிய ‘வாஷிங் மெஷினாக’ மாறியுள்ளதாக அவர் சாடியுள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் திரைப்பட பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் அமீர், தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்துத் தனது கண்டனங்களை வெளிப்படுத்தினார்.

சமீபத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது குறித்து அமீர் கடுமையான சாடல்களை முன்வைத்தார். “எதற்காக தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தார்கள்? அங்கு நடைபெற்றது குதிரை பேரம் அல்ல, அது அப்பட்டமான அயோக்கியத்தனம். அடுத்தடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு, அதுவும் தலைமைச் செயலகத்திலேயே தவெக-வில் இணைந்தது தலைமைச் செயலகத்தின் கண்ணியத்தையே குறைத்துவிட்டது” என்று கொதித்தார். மேலும், “கண்ணுக்குத் தெரிந்தவரை எதிர்க்கட்சிகளே இல்லை என்று அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார், ஆனால் தற்போது அந்தத் தொண்டர்கள் கட்சியைத் தாங்களே கரைத்துக் கொண்டு வருகிறார்கள். ராஜினாமா செய்த அந்த நான்கு முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தில் வரவிருக்கும் தேர்தலில் சீட்டு வழங்கப்பட்டால், அதைவிட மிகப்பெரிய ஜனநாயக படுகொலை வேறு எதுவும் கிடையாது” என்றும் அவர் எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகம் செய்து வரும் அரசியல் நகர்வுகளை இதற்கு முன்பு நாம் பாஜகவிடம் தான் பார்த்தோம். இதற்கு முன்பு பாஜகவிடம் இருந்த வாஷிங் மெஷின், தற்போது தமிழக வெற்றிக் கழகத்திடம் உள்ளது” என்று ஒப்பிட்டுப் பேசினார். மேலும், கரூர் சம்பவத்தில் யார் உண்மையான குற்றவாளி என்பதை அரசு உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கடந்த காலங்களில் கொடநாட்டில் நடைபெற்ற கொலைக் குற்றங்கள் குறித்து இன்றுவரை உண்மை கண்டறியப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசிய அமீர், “விஜய் தற்போது அவரது கம்போர்ட் ஜோனில் (Comfort Zone) இருக்கிறார். அவர் செய்வது சரியா தவறா என்று கருத்து சொல்ல வேண்டியது அவருக்கு வாக்களித்த பொதுமக்கள்தான். அதேபோல், தவெக-வின் ‘சிங்கப்பெண் பாதுகாப்பு படை’ என்பதிலேயே எனக்கு உடன்பாடு கிடையாது. பொதுமக்களைப் பாதுகாக்கக் காவல்துறையில் காவலர்களின் எண்ணிக்கையைத் தான் அரசு அதிகப்படுத்த வேண்டும். அதிக மன அழுத்தத்தால் தான் காவலர்கள் பல்வேறு தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்” என்றார்.

விஜய் செய்தியாளர்களைச் சந்திக்காதது குறித்த கேள்விக்கு, “கடந்த 12 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியே இன்று வரை பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவில்லை. எனவே, விஜய் செய்தியாளர்களைச் சந்திக்காமல் இருப்பதை ஒரு குறையாகச் சொல்ல முடியாது. அது அவருடைய பண்பு, அவர் அமைதியாக இருந்து நல்ல விதத்தில் செயல்படுகிறாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று கூறினார். மேலும், “முன்பு என் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று விஜய் ஆசைப்பட்டார்” என்ற ஒரு சுவாரசியமான தகவலையும் அமீர் பகிர்ந்து கொண்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பிரதமரிடம் கோரிக்கை மனு வைத்தது குறித்துப் பேசிய அமீர், “பிரதமரிடம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தொடர்பாக முதலமைச்சர் விஜய் கோரிக்கை வைத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. உங்கள் வீட்டில் என்ன நடக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும், அதற்கெல்லாம் பிரதமரிடம் கோரிக்கை வைக்கக் கூடாது” என்று விமர்சித்தார்.

கர்நாடக மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசிய அவர், “ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அப்படித்தான் இருப்பார்கள். தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவர் உண்மையாக இருக்க நினைக்கிறார். ஆனால், நாம் வாக்களித்த நம் முதல்வர் நமக்கு உண்மையாக உள்ளாரா இல்லையா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார். இறுதியாக, ஜனநாயகம் திரைப்படம் குறித்து எச்.வினோத் மற்றும் கல்வித்துறை அமைச்சரின் கருத்துகளுக்குப் பதிலளித்த அவர், உங்களுக்கு நடக்கும் அநீதியை நீங்களே சொல்லவில்லை என்றால் வேறு யார் சொல்வார்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, கல்வித்துறை அமைச்சர் அவர் துறை சார்ந்த வேலைகளைப் பார்க்கட்டும், படம் குறித்துப் பேச அதன் தயாரிப்பாளர் இருக்கிறார் என்று கறாராகக் கூறி முடித்தார்.