“திட்ட வரைவுக்கு ஒரு மாதமா?” – மின்வாரிய அதிகாரியிடம் செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்!

0
10

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், கூடுவாஞ்சேரி மின்வெட்டுப் பிரச்சினைக்குத் திட்ட முன்மொழிவு தயார் செய்ய ஒரு மாதம் அவகாசம் கேட்ட மின்வாரிய அதிகாரியிடம் மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் ஐஏஎஸ் அவர்கள் விளக்கம் கேட்டு, அடுத்த வாரத்திற்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் நள்ளிரவில் தூக்கமின்றிப் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டி, கூடுவாஞ்சேரி முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி அவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், கூடுதலாகப் புதிய மின்மாற்றிகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு குறித்து விளக்கம் அளிக்க ஆட்சியர் முன்னிலையில் அழைக்கப்பட்ட மின்வாரிய அதிகாரி, திட்ட முன்மொழிவைத் தயார் செய்யக் குறைந்தது ‘ஒரு மாதம்’ ஆகும் என்று பதிலளித்தார். பொதுமக்கள் தவித்து வரும் வேளையில், அதிகாரியின் இந்த தாமத பதிலைக் கேட்டு அதிருப்தி அடைந்த ஆட்சியர் மாலதி ஹெலன், “மின்சாரப் பிரச்சினைக்கு முன்மொழிவு தயார் செய்ய ஏன் ஒரு மாதம்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், அவர் கேட்ட அவகாசத்தைக் குறைக்க உத்தரவிட்ட ஆட்சியர், வரும் திங்கட்கிழமைக்குள் புதிய மின்மாற்றி அமைப்பதற்கான முழுமையான திட்ட முன்மொழிவை அனுப்பி, அதன் நகலைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கெடு விதித்தார்.