தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சந்தித்த தோல்விக்கான காரணங்களை ஆராயும் வகையில், மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ள தி.மு.க. தலைவர் M. K. Stalin உத்தரவிட்டுள்ளார். இதற்காக 36 பேர் கொண்ட 18 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான திருப்போரூர் சட்டசபை தொகுதிக்கான ஆய்வுப் பொறுப்பில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், திருப்போரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று தேர்தல் தோல்வி தொடர்பான கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நியமிக்கப்பட்ட குழுவினர் நேரில் பங்கேற்று, கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் உள்ளூர் பொறுப்பாளர்களிடம் விரிவாக கருத்துகளை கேட்டறிந்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை தனித்தனியாக தனி அறைக்கு அழைத்து, தொகுதியில் ஏற்பட்ட பின்னடைவுகள், தேர்தல் பணிகளில் இருந்த குறைகள், பொதுமக்களின் மனநிலை மற்றும் கூட்டணி ஒத்துழைப்பு போன்ற விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, திருப்போரூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட வி.சி.க. வேட்பாளரின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், உள்ளூர் நிர்வாக மாற்றங்கள் மற்றும் கட்சி அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கள ஆய்வின் இறுதி அறிக்கையின் அடிப்படையில், கட்சியில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.




