செங்கல்பட்டு மாவட்ட மக்களிடையே பக்தி சிறப்புடன் போற்றப்படும் பழமையான சிவாலயங்களில் ஒன்றாக கூடுவாஞ்சேரி அருகே அமைந்துள்ள நந்திவரம் அருள்மிகு நந்தீஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. தீராத நோய்கள் குணமாகவும், வாழ்க்கை துன்பங்கள் நீங்கவும், பாவங்கள் தீரவும் இந்த கோவிலில் திங்கட்கிழமைகளில் வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த கோவில் பல்லவர் கால கட்டிடக்கலையை தன்னகத்தே கொண்டுள்ளது. மூலவராக அருள்பாலிக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரருடன், ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பலிபீடமும் நந்தியும் அமைந்துள்ளன. கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் துர்கை ஆகிய தெய்வங்கள் சிறப்பாக காட்சியளிக்கின்றன. உள்பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், வீரபத்திரர் மற்றும் சூரிய பகவான் சன்னதிகளும் அமைந்துள்ளன.
மேலும் வெளிப்பிரகாரத்தில் நவகிரகங்கள் மற்றும் பெருமாள் சன்னதியும் காணப்படுகிறது. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரிஷப சிலை மற்றும் நாகலிங்க மரம் பக்தர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளன.
நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த கோவில், அவரது பெயரால் “நந்தீஸ்வரம்” என அழைக்கப்பட்டதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை கோவில் திறந்திருக்கும். திங்கட்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.




