“நள்ளிரவில் கொழுந்துவிட்டு எரிந்த தாபா!” – கேளம்பாக்கம் அருகே ஓலைக் கொட்டகை ஹோட்டலில் பயங்கர தீ விபத்து!

0
2

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கேளம்பாக்கம் அருகே உள்ள மாம்பாக்கத்தில், நள்ளிரவில் ஓலைக் கொட்டகையில் இயங்கி வந்த பிரபல பஞ்சாபி தாபா ஹோட்டல் ஒன்று திடீரென அசுர வேகத்தில் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலாகியுள்ளது. ஹோட்டலில் இருந்த சிலிண்டர்கள் வெடிப்பதற்குள் வாடிக்கையாளர்களும் பணியாளர்களும் அலறியடித்துக் கொண்டு வெளியேறியதால் நல்வாய்ப்பாகப் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

சென்னை ஐடி காரிடார் பகுதியான கேளம்பாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் ஆதித்யா என்பவருக்குச் சொந்தமான பஞ்சாபி தாபா ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்றிரவு சுமார் 9 மணியளவில் இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் பலரும் உணவருந்திக் கொண்டிருந்த சமயத்தில், சமையலறைப் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பி ஓலைக் கொட்டகையில் தீப்பற்றிக் கொண்டது. ஹோட்டல் முழுவதும் பாரம்பரிய முறையில் ஓலைகளால் வேயப்பட்டிருந்ததாலும், கோடைக்காலக் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், தீ கணப்பொழுதில் மலமலவெனக் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தீ அசுர வேகத்தில் பரவுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது உயிரைக் காத்துக் கொள்ள உடனே அலறியடித்தபடி ஹோட்டலை விட்டு வெளியேறினர். இந்த விபத்தில் தாபா ஹோட்டலுக்குள் இருந்த பாரம்பரிய கயிறு கட்டில்கள், மர மேஜைகள், நாற்காலிகள் மற்றும் சமையல் உபகரணங்கள் அனைத்தும் தீக்கிரையாகி முற்றிலும் கருகி சாம்பலாகின. இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறுச்சேரி சிப்காட் (SIPCOT) தீயணைப்புத் துறையினர், சுமார் அரை மணி நேரம் கடுமையானப் போராட்டத்திற்குப் பின் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த விபத்தால் ஏற்பட்ட மொத்தப் பொருட்களின் சேத மதிப்பு எவ்வளவு மற்றும் விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்துத் தாழம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.