தாழம்பேடு பகுதியில் உள்ள காந்தி நகர், குளக்கரை முதல் தெருவில் சேதமடைந்த மின்கம்பங்களால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சுமார் 15-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல மின்கம்பங்களில் சிமெண்ட் பூச்சு முறிந்து விழும் நிலையில் காணப்படுவதுடன், சில மின்கம்பங்களின் அடிப்பகுதிகள் உடைந்து அபாயகரமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சாலை வழியாக தினமும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சென்று வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் கூறுகையில், “ஊராட்சி தலைவரிடம் புகார் தெரிவித்தால் மின்வாரியத்தில் கூறுமாறு தெரிவிக்கின்றனர். மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெரிய விபத்து நடைபெறுவதற்கு முன்பு புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும்” என்றார்.
மின்கம்பங்களின் சேதநிலையை உடனடியாக ஆய்வு செய்து, புதிய மின்கம்பங்கள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




