சிங்கப்பெருமாள் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சிதறிக்கிடக்கும் ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு புறநகர் வளர்ச்சி பகுதிகளில் முக்கியமான இடமாக விளங்கும் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் இருந்து Sriperumbudur, ஓரகடம் உள்ளிட்ட தொழிற்பேட்டை பகுதிகளுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் ஆப்பூர், திருக்கச்சூர், கொளத்தூர், தெள்ளிமேடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களுக்கு பயணம் செய்கின்றனர்.
இந்த பகுதியில் இருந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தீர்க்கும் வகையில் ரூ.138.27 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜல்லிக்கற்கள் ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகளில் இருந்து சிதறி விழும் கற்கள் மேம்பாலத்தின் பல்வேறு இடங்களில் பரவி கிடக்கின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மேம்பாலத்தில் தேங்கியுள்ள மண் துகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் புகுவதால் பயணம் சிரமமாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், “மேம்பாலத்தில் தினமும் கனரக லாரிகள் செல்வதால் ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறிக்கிடக்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் இது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. உடனடியாக சாலையை சுத்தம் செய்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
எனவே, மேம்பாலத்தில் பரவி கிடக்கும் ஜல்லிக்கற்கள் மற்றும் குப்பைகளை அகற்றி, சாலை பாதுகாப்பை உறுதி செய்ய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




