“காசு கொடுத்தாச்சு.. ஓடிபி-யும் வாங்கியாச்சு.. சிலிண்டர் எங்கே?” – கேஸ் ஏஜென்சியை வெளுத்து வாங்கிய பெண்கள்!

0
4

வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் ஓடிபி எண்களை முன்கூட்டியே வாங்கிக் கொண்டு, சிலிண்டர்களைக் கொடுக்காமல் கள்ளச்சந்தையில் ₹4,000 வரை அதிக விலைக்கு விற்று ஏமாற்றி வந்த கேஸ் ஏஜென்சி ஊழியர்களின் அராஜகத்தைக் கண்டித்து, செங்கல்பட்டில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஏஜென்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு ராட்டினங்கிணறு பகுதியில் இயங்கி வரும் பாரத் எரிவாயு (Bharat Gas) ஏஜென்சி அலுவலகம் முன்பாகவே, சிலிண்டர் விநியோகத்தில் நடைபெறும் இமாலய முறைகேடுகளைக் கண்டித்துப் பொதுமக்கள் இந்த விபரீத முற்றுகைப் போராட்டத்தில் குதித்துள்ளனர். செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் கூட்ரோடு மற்றும் செம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏழை, எளிய பொதுமக்கள் இந்த ஏஜென்சி மூலமாகவே தங்களது அத்தியாவசிய வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பெற்று வருகின்றனர்.

தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் கடுமையான போர்ச் சூழல் காரணமாக, நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிலிண்டர் பதிவு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்த ஏஜென்சிகள் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அந்தப் புதிய நடைமுறைப்படி, வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் முழுப் பணத்தைச் செலுத்திய பிறகு, அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) பாதுகாப்புக் குறியீட்டைப் பதிவு செய்த பின்னரே சிலிண்டர் விநியோகிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த விதியைப் பயன்படுத்தி ஏஜென்சி ஊழியர்கள் சிலர் நயவஞ்சகப் பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகப் பொதுமக்கள் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகின்றனர். சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, சுமார் ₹1,100 மதிப்புள்ள வீட்டு உபயோக சிலிண்டர்களை, ஹோட்டல் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்குக் கள்ளச்சந்தையில் (Black Market) ₹3,000 முதல் ₹4,000 வரை ஊழியர்கள் அதிரடியாக விற்று வந்துள்ளனர்.

இதற்காகச் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள், அப்பாவிக் கிராமப்புறப் பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று, “சிலிண்டர் வண்டியில் வந்து கொண்டிருக்கிறது, அதற்குள் ஓடிபி (OTP) எண்ணை மட்டும் கொடுங்கள்” என முன்கூட்டியே ஏமாற்றி வாங்கிக் கொண்டு, அவர்களுக்குச் சிலிண்டரை விநியோகிக்காமல் அப்படியே கள்ளச்சந்தைக்குக் கடத்தி விற்று உல்லாசம் அனுபவித்துள்ளனர். இதனால் ஆன்லைனில் பணம் கட்டி, ஓடிபி-யும் கொடுத்த வாடிக்கையாளர்கள் தங்களது சிலிண்டருக்காகப் பதிவு செய்து 3 முதல் 4 மாதங்கள் கடந்தும் சிலிண்டர் கிடைக்காமல் சமையல் செய்ய வழியின்றித் தவித்து வந்துள்ளனர்.

இதனால் பொறுமையிழந்த ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்கள் மற்றும் பொதுமக்கள், இன்று சம்பந்தப்பட்ட பாரத் சிலிண்டர் ஏஜென்சி அலுவலகத்தை ஒட்டுமொத்தமாக முற்றுகையிட்டு, அங்கிருந்த ஊழியர்களை நாலாபுறமும் வளைத்து வெளுத்து வாங்கி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை கைமீறிப் போய் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து, சம்பவ இடத்திற்குச் செங்கல்பட்டு போலீசார் போர்க்கால அடிப்படையில் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். “இந்தக் கடுமையான மோசடி புகார்கள் குறித்து நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் உரிய விசாரணை நடத்தி, தவறு செய்த ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக சிலிண்டர் கிடைக்கப் போர்க்கால ஆக்‌ஷன் எடுக்கப்படும்” எனப் போலீசார் உத்திரவாதம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களது தற்காலிகப் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.