சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆராய அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனையை மேற்கொண்டார். தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய நியமிக்கப்பட்ட 36 பேர் கொண்ட குழுவினரிடம், தொகுதி வாரியாக விரிவான கள ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர் தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக அடைந்த எதிர்பாராத பின்னடைவு குறித்து அக்கட்சியின் தலைமை தீவிரமான ஆய்வில் இறங்கியுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவினருடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
தேர்தல் தோல்வி குறித்துத் தொகுதி வாரியாக ஆய்வு செய்ய திமுக தரப்பில் 36 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ஒவ்வொரு தொகுதியிலும் நிலவிய அரசியல் சூழல், வாக்குப்பதிவு சரிந்ததற்கான காரணங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்துத் தொண்டர்களிடம் நேரடியாகக் கருத்துகளைக் கேட்டறிய உள்ளனர்.
ஆலோசனைக் கூட்டத்தின் போது, இந்தக் குழுவினர் தங்களது ஆய்வை விரைந்து முடித்து, அடுத்த 20 நாட்களுக்குள் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கையின் அடிப்படையில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில அளவிலான நிர்வாகப் பொறுப்புகளில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம், ஆனால் தோல்விக்கான காரணங்களைச் சரிசெய்வோம்” என்ற முனைப்பில் திமுக இறங்கியுள்ளது. 36 பேர் குழு சமர்ப்பிக்கப்போகும் அறிக்கை, திமுக-வின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். திமுக-வின் இந்தச் சீரமைப்புப் பணிகள் அக்கட்சியை மீண்டும் வலுப்படுத்துமா? உங்கள் கருத்து என்ன?





