“மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வந்தாச்சு!”: மே மாதத் தொகையை விடுவித்த முதலமைச்சர் விஜய்!

0
2

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கோடிக்கணக்கான பெண்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மே மாதத்திற்கான ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ ரூ. 1,000 இன்று பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. நேற்று அரசு வெளியிட்ட அறிவிப்பால் குழப்பத்தில் இருந்த பெண்களுக்கு, இன்று காலை மொபைலில் வந்த
இனிப்பான அதிர்ச்சியை அளித்துள்ளது.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்ற நிதித்துறை ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, “மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்யக் கால அவகாசம் தேவைப்படுவதால், மே மாதத் தொகை விரைவில் வழங்கப்படும்” என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் 15-ஆம் தேதியான இன்று பணம் வருமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், நேற்று முதல்வர் இட்ட அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி இன்று காலையே 1.31 கோடி பெண்களின் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ. 1,000 ஊக்கத்தொகையும் (புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள்) நேற்று மாலை முதல் மாணவர்களின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்பட்டது. முந்தைய அரசு கொண்டு வந்த முக்கிய நலத்திட்டங்கள் தடையின்றித் தொடர்வதை இந்தப் பரிமாற்றங்கள் உறுதி செய்துள்ளன.

தேர்தல் பிரசாரத்தின் போது, “தவெக ஆட்சிக்கு வந்தால் ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ மூலம் பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கப்படும்” என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். தற்போது அரசு மேற்கொண்டு வரும் ‘மறுசீரமைப்பு’ பணிகள், இந்தத் தொகையை உயர்த்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 60 வயதுக்குட்பட்ட அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

“ஆட்சி மாறியதால் திட்டம் நின்றுவிடுமோ என்று கவலையாக இருந்தது. ஆனால், முதல்வர் சொன்னபடி இன்று காலையிலேயே பணம் வந்துவிட்டது,” எனப் பயனாளிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வு மற்றும் மகளிர் உரிமைத்தொகை விடுவிப்பு எனத் தமிழக அரசு அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.