ஒரு கிலோ டீ தூள் ரூ.25 ஆயிரம்: நீலகிரியில்…

0
1

நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக ஜப்பானின் பிரபலமான ‘மாச்சா’ டீ அறிமுகப்படுத்தப்பட்டு, கிலோ ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவது தேயிலை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நீலகிரி மாவட்டம் தேயிலை சாகுபடிக்குப் பெயர் பெற்ற பகுதியாகும். இங்கு 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சமீப காலமாக பச்சை தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழலில், தேயிலையை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி சர்வதேச தரத்தில் சந்தைப்படுத்தும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக குன்னூர் அருகே உள்ள பெட்போர்டு பகுதியில் செயல்பட்டு வரும் ‘டேஞ்ஜோ டீ’ என்ற தனியார் தேயிலை விற்பனை நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட தேயிலை வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இங்கு ஒரு கப் டீ ரூ.25 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது முதன்முறையாக ஜப்பானின் பாரம்பரியமான ‘மாச்சா டீ’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பான் மாச்சா டீ ஒரு கிலோ ரூ.25,000க்கும், இந்திய மாச்சா டீ கிலோ ரூ.19,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜப்பானிய கலாச்சாரத்தில் முக்கிய இடம் பெறும் மாச்சா தேயிலை, அறுவடைக்கு முன் 3 முதல் 4 வாரங்கள் நிழலில் வளர்க்கப்படுகிறது. இதனால் இலைகளில் குளோரோபில் சத்து அதிகரித்து, அடர் பச்சை நிறமும் தனித்துவமான சுவையும் கிடைக்கிறது. பின்னர் இலைகள் கைகளால் பறிக்கப்பட்டு கல் உரலில் நுணுக்கமாக அரைத்து தூளாக்கப்படுகிறது.

இந்த புதிய முயற்சி நீலகிரி தேயிலை தொழிலுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.