வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் எண்ணிக்கை குறைவு

0
1

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் எண்ணிக்கை குறைவு: சுற்றுலா பயணிகளை கவரும் புதிய வசதிகள்

மதுராந்தகம் அருகே உள்ள புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தாண்டும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகளின் வருகையால் கவனம் பெற்றது. சுமார் 86 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 16 அடி வரை தண்ணீர் சேமிக்க முடியும். ஆனால் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், ஏரியில் தற்போது 5 அடி அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.

இங்கு நிலவும் இயற்கை சூழல் காரணமாக பர்மா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்திருந்தன. நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, நீர்க்காகம், கூழைக்கடா, கரண்டிவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் சரணாலயத்தில் தங்கியிருந்தன.

பொதுவாக செப்டம்பர் மாத இறுதியில் வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கி, மே மாத இறுதிக்குள் மீண்டும் தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்கின்றன. தற்போது பல பறவைகள் தங்களது குஞ்சுகளுடன் திரும்பிச் செல்ல தொடங்கியதால், சரணாலயத்தில் 10 ஆயிரத்திற்கும் குறைவான பறவைகள் மட்டுமே உள்ளன.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல புதிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. க்யூஆர் குறியீடு கொண்ட தகவல் பலகைகள் 18 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனை ஸ்கேன் செய்தால் பறவைகளின் ஒலி மற்றும் தகவல்களை மொபைலில் அறிந்து கொள்ளலாம்.

மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்கள் சோதனை செய்து பறிமுதல் செய்யப்படுகின்றன.